முக்கொம்பு-காவிரி கரைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


முக்கொம்பு-காவிரி கரைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x

முக்கொம்பு-காவிரி கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி

காணும் பொங்கல் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கல் விழா களை கட்டியது. சுற்றுலா மைய பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குடும்பம், குடும்பமாக குவிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கும் முக்கொம்பு அணைக்கு திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா

அவர்கள் தடுப்பணையில் இருந்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். அங்குள்ள பூங்காக்களில் அமர்ந்தும் பொழுதை கழித்தனர். குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். பின்னர் மரத்தின் நிழலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து, வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவை உண்டு மகிழ்ந்தனர்.

ஒரு சில இளைஞர்கள் காணும் பொங்கலை நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர். முக்கொம்பு, காவிரி கரையோர பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தனர். திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் கல்லணை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் திருச்சியில் உள்ள முக்கிய பகுதிகளான மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், அம்மா மண்டபம் படித்துறை, கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் கோவில், காவிரி கரையோர பகுதிகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் திருச்சி மாநகரில் உள்ள பூங்காங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. சிறுவர்கள் பூங்காக்களில் விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். ரெயில் அருங்காட்சியகத்திலும் கூட்டம் அலைமோதியது.

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். பெண்களை கேலி செய்யும் வாலிபர்களை பிடிக்க சீருடை அணியாத போலீசார் ரோந்து சென்றனர்.


Next Story