வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்
திருப்பூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பெருமாள் கோவில் தேரோட்டம்
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் சாமிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பெண் கவுன்சிலர்கள் தாம்பூலத்தில் சீர்வரிசை பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர்.
மேயர் தொடங்கி வைத்தார்
கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மேயர், ஆணையாளர், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேயர் தினேஷ்குமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விகாஸ் வித்யாலயா பள்ளிகளின் தலைவர் ஆண்டவர் ராமசாமி,ஸ்ரீகந்தவேல் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் ஆர்.ஜே.பிரகாஷ், ஷோபா ஸ்டோர் உரிமையாளர் மகேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க, இசை வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரின் முன் பெண்கள் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடிச்சென்றனர். கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடக்கிறது.