'ஆன்லைன் டிரேடிங்' மூலம்இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடிகல்லூரி மாணவர் கைது
‘ஆன்லைன் டிரேடிங்' மூலம் இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
'ஆன்லைன் டிரேடிங்' மூலம் இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி. அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மகன் சஞ்சய் (வயது 23). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார்.
இதே கல்லூரியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வைரமுத்து பாலாஜி (23) என்பவரும் மருந்தாளுனராக படித்து வருகிறார். இதற்கிடையில் சஞ்சய், தான் 'ஆன்லைன் டிரேடிங்' தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் முதலீடு செய்தால் 40 நாட்களுக்குள் கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பு பணம் கொடுப்பதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரூ.49 லட்சம்
இதை உண்மை என நம்பி வைரமுத்து பாலாஜி, பெற்றோரிடமும், தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை வாங்கி மொத்தம் ரூ.49 லட்சத்து 10 ஆயிரத்தை சஞ்சயிடம் கடந்த ஆண்டு வழங்கி உள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் வைரமுத்து பாலாஜி தான் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக கொடுக்கும்படி சஞ்சயிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர், வைரமுத்து பாலாஜியிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைரமுத்து பாலாஜி, கடந்த மாதம் 28-ந் தேதி இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் சஞ்சயை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வைரமுத்து பாலாஜியை போல் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று சஞ்சய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சஞ்சயை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர் ஒருவர், சக மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருக்கும் சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.