அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக கும்பகோணம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் தொலார் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(வயது 47) ஓட்டினார். அன்னக்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த புகழேந்தி(52) கண்டக்டராக இருந்தார். ஜெயங்கொண்டம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில், அந்த பஸ் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் புறப்பட்டது. அப்போது பெண் ஒருவர் பஸ்சில் ஏறுவதற்காக ஓடி வந்தார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தி, அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பஸ் டிரைவரிடம், அந்த பெண் பஸ்சில் ஏற வருவது தெரியாமல் பஸ்சை இயக்குகிறீர்களே? என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு டிரைவர் அந்த பயணியை ஏற்றிக்கொண்டுதான் செல்கிறோம், என்று கூறிவிட்டு பஸ்சை கும்பகோணம் நோக்கி ஓட்டி வந்தார். தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது மீண்டும் 2 பேரும், பஸ் டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர்.

அவர்களை சமாளித்து அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றபோது, ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரி அருகே பைபாஸ் மேம்பாலத்திற்கு முன்பாக மீண்டும் அந்த நபர்கள் பஸ்சை மறித்து, பஸ்சின் மீது கல்லை எடுத்து எறிந்துள்ளனர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்தது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து ேமாட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. மேலும் பயணிகள் செல்வதற்காக மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அவர்கள் பயணம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகந்நாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story