தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

மூதாட்டி கொலை

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை கரும்பாயம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேலின் மனைவி பாப்பாத்தி(வயது 80). வீட்டில் தனியாக வசித்து வந்த பாப்பாத்தி, கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி காலை வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து பெட்டவாய்த்தலை போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மர்மசாவு என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மூதாட்டி பாப்பாத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். அப்போது, பாப்பாத்தியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்பிரமணியனின் மகன் ராஜலிங்கம் (21) என்பவர் தான் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

கூலித்தொழிலாளி கைது

இதைத்தொடர்ந்து காகித ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ராஜலிங்கத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் இல்லாததால், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வாயை பொத்தி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியை ராஜலிங்கம் திருடிச்சென்றுள்ளார். ஆனால் மூதாட்டி அணிந்திருந்த தோடு கவரிங் என்றும், மூக்குத்தி 1 கிராம் மட்டுமே இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை ஆதாயக்கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், ராஜலிங்கத்தை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில், ராஜலிங்கம் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் ராஜலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ராஜலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள ராஜலிங்கத்துக்கு வழங்கப்பட்டது.


Next Story