டிக்கெட் பரிசோதகர்கள் தபால் அனுப்பி போராட்டம்
டிக்கெட் பரிசோதகர்கள் தபால் அனுப்பி போராட்டம் நடத்தினர்.
ரெயில் டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் 4 பேரை நியமிக்க வேண்டிய இடத்தில் 7 பேரை நியமனம் செய்ததை கண்டித்தும், பெண் டிக்கெட் பரிசோதகர்களுக்கு ஓய்வறை அமைத்து தரவேண்டும், கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட பணி முறை இன்றும் தொடர்வதை கண்டித்தும் டி.ஆர்.இ.யு. டிக்கெட் பரிசோதகர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவற்றை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் இருந்து தபாலில் அனுப்பி நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு தட்சண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.) கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் ராஜா, சரவணன், உதவி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் கூறுகையில், எங்கள் முறையான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.