துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிகாதல் மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்


துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிகாதல் மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்
x

திருச்செங்கோட்டில் பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை என நாடகமாடியது அம்பலமானது.

நாமக்கல்

திருச்செங்கோடு

தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் மகனும், 6-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

கடந்த 7-ந் தேதி விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காயங்கள் இருந்ததால்...

இந்தநிலையில் விஜயலட்சுமியின் உறவினர்கள் அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் விஜயலட்சுமியின் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று விஜயலட்சுமியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.

நடத்தையில் சந்தேகம்

அப்போது விஜயலட்சுமியின் கணவர் செல்வத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான. அதன் விவரம் வருமாறு:-

விஜயலட்சுமியும், செல்வமும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 24 வயது வித்தியாசம் இருந்ததாக தெரிகிறது. இந்த வயது வித்தியாசம் தொடர்பாக விஜயலட்சுமி நடத்தையில் செல்வம் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

கணவர் கைது

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவால் விஜயலட்சுமி கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜயலட்சுமி உடலை வைத்துக்கொண்டு உறவினர்களிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுதுள்ளார். இதை உறவினர்கள் நம்பி உள்ளனர். இதற்கிடையே விஜயலட்சுமி கழுத்தில் இருந்த காயங்கள் ஏற்படுத்திய சந்தேகம் அவரை போலீசாருக்கு காட்டிக் கொடுத்துள்ளது.

உடனே போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். காதல் மனைவியை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story