தாளவாடி அருகே மாடு- கன்றுக்குட்டியை புலி அடித்து கொன்றது


தாளவாடி அருகே மாடு- கன்றுக்குட்டியை புலி அடித்து கொன்றது

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஜீர்கள்ளி, கேர்மாளம் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி போன்றவை அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி கிராமத்தில் நடந்து உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெள்ளன் (வயது 55). இவர் 5 மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் அங்குள்ள மானவாரி நிலத்தில் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், தங்களுடைய மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று வெளியேறி அங்கு மேய்ந்து கொண்டிருந்த பெள்ளனின் மாடு மற்றும் கன்றுக்குட்டியை அடித்து கொன்றது.

அப்போது மாடும், கன்றுக்குட்டியும் சத்தம் போட்டு கத்தின. மாடு கத்தும் சத்தம் கேட்டும், அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது மாடும், கன்றுக்குட்டியும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்தும் ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாட்டையும் கன்றுக்குட்டிையை பார்வையிட்டனர்.

மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது அது புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மாட்டை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.


Related Tags :
Next Story