முதுமலையில் இறந்து கிடந்த புலி-வனத்துறையினர் விசாரணை
முதுமலையில் 10 வயதுடைய ஆண் புலி இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடலூர்
முதுமலையில் 10 வயதுடைய ஆண் புலி இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து கிடந்த புலி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த நிலையில் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனச்சரகத்தில் கல்லல்லா பகுதியில் வன ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆண் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டனர். மேலும் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில் வனச்சரகர் விஜயன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனை
பின்னர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், டாக்டர் பவித்ரா ஆகியோர் வரவழைக்கப்பட்டு புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த புலிக்கு சுமார் 10 வயது இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் 2 புலிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் பலத்த காயமடைந்து ஆண் புலி உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து வனச்சரகர் விஜயன் கூறியதாவது:- ஆண் புலி வசிக்கும் எல்லைக்குள் மற்றொரு புலி நுழைய முயன்று இருக்கலாம். குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வசிக்கும். இதனால் எல்லைக்குள் நுழைய முயன்ற புலிக்கும், ஆண் புலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளது. பின்னர் காயங்கள் குணமடையாமல் உடல் பலவீனம் அடைந்து புலி இறந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.