அதிக மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு


அதிக மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு
x

பொங்கல் பண்டிகையையொட்டி அதிக மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ெதரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

பொங்கல் பண்டிகையையொட்டி அதிக மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிரோன் மூலம் கண்காணிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை கண்காணிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ரோந்தில் ஈடுபட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் 5, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் 10, மோட்டார்சைக்கிள் ரோந்து வாகனங்கள் 55, சோதனை சாவடிகள் 11, அதிவிரைவுப் படைகள் 3 ஆகியவை மூலம் கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்துகளை சீர் செய்ய 31 இடங்களில் போக்குவரத்துக் காவல் குழு, 4 இடங்களில் உயர் கோபுர காவல் கண்காணிப்பு மையம், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடக்காமல் இருக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

195 ரவுடிகள்

பாதுகாப்புப் பணியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 54 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 659 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் எந்தவித குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ரவுடி வேட்டை கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்டது.

அதில் கொடூர குற்றப் பின்னணி கொண்ட 5 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், 6 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டி கோட்டாட்சியர் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு, நன்னடத்தைக்கான பிணை ஆவணம் பெறப்பட்டது. இதுவரை 195 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நன்னடத்தைக்கான பிணை ஆவணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குண்டர் சட்டத்தின் கீழ் சிறை

எவரேனும் ரவுடியிசம் அல்லது ஏதேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story