கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த காலஅவகாசம் வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வருவாய்த்துறை
சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் மாநில தலைவர் எம்.பி.முருகையன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜீத், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாநில செயலாளர் தமிழரசன், பொது செயலாளர் சு.சங்கரலிங்கம், மாநில துணை தலைவர் செந்தூர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த போதிய கால அவகாசம் வட்டம், கோட்டம், மாவட்ட அளவில் சிறப்பு பணியிடங்கள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
பதவி உயர்வு
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தில் பணியிறக்கத்தை தவிர்க்க பதவி உயர்வு பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். சமீபத்தில் பணியிறக்கம் செய்யப்பட்ட 45 துணை ஆட்சியர்களில் ஒருவர் கூட பாதிக்கப்படாமல், மீண்டும் துணை ஆட்சியர் பதவி உயர்வுபெற வழிவகை செய்ய வேண்டும்.
இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் விதித்திருந்த அரசாணையை உடனடியாக வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் கலைத்ததை ரத்து செய்து மீண்டும் இப்பணியை வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தரஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆகஸ்டு 2022-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60-ம் ஆண்டு வைரவிழா மாநில மாநாட்டை டிசம்பர் மாதம் சென்னையில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.