மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அவசர கதியாக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்புதான் மின்கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்த தி.மு.க. அரசு, மீண்டும் ஆதார் இணைப்புக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் இன்னலுக்குள்ளாக்கி இருக்கிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளமும் கடந்த சில நாட்களாக முடங்கிக்கிடக்கிறது. மின்சார வாரிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வரிசைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
விளக்கம் இல்லை
எதற்காக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவேண்டும் என்ற விளக்கம் சொல்லாமல், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்தமுடியாது என்று அறிவித்த தி.மு.க. அரசு, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு சற்று பின்வாங்கி, டிசம்பர் 31-ந் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்சார கட்டணம் செலுத்தலாம் என கண் துடைப்புக்காக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக மின்சார வாரியத்தை காப்பாற்ற புதிதாக எதுவும் திட்டங்கள் தீட்டாமல், தற்போது மானியமாக வழங்கிக்கொண்டிருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை நிறுத்தப்போகிறார்களோ என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்திருக்கிறது இந்த அவசர அறிவிப்பு.
காலஅவகாசம்
மத்திய அரசின் மானியத்தொகை பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவதற்காக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, மத்திய அரசு ஒரு ஆண்டுக்கும் மேல் அவகாசம் கொடுத்திருந்தது.
ஆனால் அப்படி எந்த கால அவகாசமும் கொடுக்காமல், காரணமும் சொல்லாமல், திடீரென மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
எனவே, தமிழக அரசு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கவேண்டும். அதுவரை மின் கட்டணம் செலுத்துவதிலோ, மின்சார இணைப்பிலோ எந்த சிக்கலும் உருவாக்கி பொதுமக்களை வஞ்சிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.