திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்


திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதி அதே பகுதியில் உள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி கட்டிடம் முழுவதும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆங்காங்கே விரிசல்களுடன் சேதமடைந்து அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால் 115 பேர் தங்கி இருந்த விடுதியில் தற்போது வெளியூர்களை சேர்ந்த 45 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாணவர்கள் பெட்டி, பைகளுடன் விடுதி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விடுதி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். ஏழை மாணவர்களான நாங்கள் வேறு வழியின்றி உயிரை பணயம் வைத்துதான் விடுதி கட்டிடத்தில் தங்கி இருக்கிறோம். எப்போது என்னவாகுமோ என்ற அச்சத்தால் இரவு நேரங்களில் சரியான தூக்கம் இல்லை. எனவே விடுதி கட்டிடத்தை புதுப்பித்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் அல்லது இடித்து விட்டு புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாசில்தார் வசந்தகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story