கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர், பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. வேலூரில் 108 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
4 லிட்டர் தண்ணீர்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நாராயணமூர்த்தி:- வேலூர் என்றாலே வெயிலூர் என்பார்கள். அதற்கேற்றது போல் இப்போது அக்னி நட்சத்திரத்தில் வெயில் அதிகமாக உள்ளது. 108 டிகிரி வரை கொளுத்துகிறது. வெயில் காலத்தில் பகல் நேரத்தில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் நீராகாரத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர், மோர், இளநீர், பழரசங்கள், எலுமிச்சை சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம். அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். அப்போது தான் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வெயில் காலத்தில் வியர்வை வழியாக நீர் வெளியேறுகிறது. அதனால் ஒருவர் குறைந்தது 3 லிட்டரில் இருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்த வேண்டும். சிறுநீரக கற்கள் ஏற்பட்டு அடிக்கடி அதனால் அவதிப்படுபவர்கள் இதனை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெயில் காலத்தில் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு முதுகு வலி வந்தாலோ, சிறுநீரகத்தில் ரத்தம் வந்தாலோ உடனே அவர்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
பருத்தி ஆடை
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில்:- கோடை காலத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை உணவு, உடை, உறைவிடம், வேலை செய்யும் இடம் ஆகும். ஜன்னல், கதவுகள் திறந்து வைத்து காற்றோட்டமாக இருக்க வேண்டும். நமது உடலில் 70 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 30 சதவீதம் தான் சதைப்பகுதியாக இருக்கும். எனவே தண்ணீர் மிக அவசியம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கூழ், பழஜூஸ் குடிக்கலாம். நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், தர்பூசணி, முள்ளங்கி போன்ற காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வறுத்த பொருட்கள், கொழுப்பு நிறைந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்துக்கு ஒத்து வராது. இறுக்கமாக உடை அணியக்கூடாது. பருத்தி ஆடை அணியலாம். அடர்த்தியான நிறம் கொண்ட உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். குளிர் கண்ணாடி, தொப்பி, குடைகள் பிடித்து வெளியே போகலாம். உடம்பில் தண்ணீர் சத்து குறையக்கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் வெயிலில் செல்லக்கூடாது. உடலின் வெப்பநிலை ஒரு அளவுக்கு மேல் இருந்தால் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படுத்தலாம். எனவே அனைவரும் கோடைகாலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பழ வகைகள்
ஆற்காட்டை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் சி.சுதா:- நாம் உடல் சூட்டைத் தணிக்க அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும். இயற்கையாக கிடைக்கக் கூடிய நீர்சத்து அதிகமுள்ள பழவகைகளான தர்பூசணி, திராட்சை, வெள்ளரிப்பழம் மற்றும் கிர்ணிப்பழம் சாப்பிடலாம். நீர்சத்து மிகுந்த காய்கறி வகைகளையும், சிறு தானியவகையான கம்பு, கேழ்வரகு கூழாகவும் சமைத்து அருந்தலாம். செயற்ைக குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக்கூடிய பழவகைகளை பழச்சாறாக அருத்தலாம். காற்றோட்டமான உள்ளாடைகளையும், பருத்தி ஆடைகளையும் அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிதல் கூடாது.
பிள்ளைகள் காலை நேரத்தில் படிப்பது சிறந்தது. மாலை நேரத்தில் விளையாடுவதும் நல்லது. மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காலை, மாலை இரு முறை நீராடுதல் வேண்டும். இது உடல் சூட்டை சமன் செய்வதற்கு உதவும். நாள்தோறும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.செல்வி:- கடந்த சில நாட்களாக வெயில் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தை குறைக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை பழச்சாறு, இளநீர், நுங்கு போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். உச்ச வெயில் என்று கூறப்படும் பகல் 12 மணிக்கு மேல் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளலாம். மேலும் காட்டன் சார்ந்த துணிகளை அணியலாம். கருப்பு கலர் துணிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் சிலருக்கு வெயிலில் சென்று வருவதால் முகத்தில் சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முகத்திற்கு பாசிப்பயிறு, கடலைமாவு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். வெயிலில் வெளியே செல்லும் பெண்கள் பெரும்பாலும் மேக்கப் போடுவதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுரை
கோடைகால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.
குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.
அதிக நேரம் சூரிய ஒளி
வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.
ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.