காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி


காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி
x

ஐப்பசி முதல் நாளையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது

மயிலாடுதுறை

தங்களது பாவம் நீங்க பக்தர்கள் புனித நீராடியதால் கருமை நிறம் அடைந்த கங்கை நதி, சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், அப்போது சிவபெருமான் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கைக்கு வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கோவில்களில் இருந்தும் சாமி புறப்பட்டு, துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஒரு மாதமும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம்.

தீர்த்தவாரி

அதன்படி நேற்று அதிகாலை முதலே காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அறம்வளர்த்த நாயகி உடனான ஐயாறப்பர் சாமி, ஞானாம்பிகை உடனான வதானேஸ்வரர், காசி விசாலாட்சி உடனான காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர், துலாக்கட்ட விஸ்வநாதர் ஆகிய சாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருள அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story