போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்வளாகத்தில் பெருந்திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் நகரம் சிக்கி தவிப்பதால், புறநகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்வளாகத்தில் பெருந்திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் நகரம் சிக்கி தவிப்பதால், புறநகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோவிலில் குவியும் பக்தர்கள்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கந்தசஷ்டி, மாசி திருவிழா, ஆவணி திருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.
மார்கழி மாதத்தில் சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு செல்கின்ற பக்தர்களும் தவறாமல் திருச்செந்தூருக்கு வந்து முருகபெருமானை வழிபட்டு செல்கின்றனர். அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
வார விடுமுறை நாட்களிலும் திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுகின்றனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கிறார்கள்.
பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வருவதால் திருச்செந்தூரில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில் திருச்செந்தூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எனவே, புறநகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.
பெருந்திட்ட வளாக பணிகள்
திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கார்க்கி:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், அங்கு போதியளவு வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
வார விடுமுறை நாட்கள் உள்ளிட்ட பெரும்பாலான நாட்களில் வாகன நிறுத்தும் இடங்களில் கார்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரத வீதிகள், தெப்பக்குளம், பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
கந்தசஷ்டி, மாசி திருவிழா போன்ற விழாக்காலங்களில் திருச்செந்தூருக்கு வரும் வாகனங்களை புறநகரில் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். அதேபோன்று தற்போதும் கோவிலில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் நிறைவு பெறும் வரையிலும், புறநகரில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அங்கிருந்து பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்லும் வகையில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
புறநகரில் வாகன நிறுத்துமிடம்
திருச்செந்தூர் கந்தையா:-
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். உள்ளூர் மக்களும் அவசர தேவைக்கு வெளியில் சென்று வர சிரமமாக உள்ளது.
எனவே, விழாக்காலங்களில் கடைபிடிப்பதை போன்று புறநகர் பகுதிகளில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அங்கிருந்து கோவிலுக்கு பக்தர்களை அரசு பஸ், மினி பஸ் போன்றவற்றில் அழைத்து செல்ல வேண்டும்.
பக்தர்கள் சிரமம்
கரூர் மாவட்டம் செந்தியாநத்தத்தை சேர்ந்த பக்தர் கனகராஜ்:-
நான் திருச்செந்தூர் கோவிலுக்கு அடிக்கடி வருவேன். கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் நகருக்குள் வரும்போது போக்குவரத்து நெரிசலால் மிகுந்த சிரமமாக இருக்கிறது. மேலும், இந்த போக்குவரத்து நெரிசலை பார்க்கும் போது, உள்ளூர் மக்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள். மேலும், தற்போது அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள், பாதையாத்திரை பக்தர்கள் அதிக அளவு வருகிறார்கள். இந்த போக்குவரத்து நெருக்கடியில் ஊர்வலமாக வரும் பாதயாத்திரை பக்தர்கள் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. அதேபோல் இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு தனியாக வாகன நிறுத்துமிடம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை சேர்ந்த பக்தர் பொன் பாலகணேசன்:-
நாங்கள் திருச்செந்தூருக்கு சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்துள்ளோம். போக்குவரத்து நெரிசல் காரணமாக திருச்செந்தூர் நகர் பகுதிக்குள் பஸ் உள்ளே வர முடியவில்லை, ரொம்ப சிரமப்பட்டு உள்ளே வந்தது. மேலும் சாமி தரிசனம் செய்யவும் அதிக நேரம் ஆகிறது. எங்களைபோல் தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் கோவிலுக்கு எளிதாக, சிரமம் இன்றி சென்று சாமி தரிசனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.