திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது கைவரிசை: அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது கைவரிசை: அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x

திருவள்ளூரில் தொழிற்சாலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் வரதராஜபுரம், ராகவா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது 39). இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மனிதவள முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 13-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தாருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந் தார். பின்னர் பதறியடித்தவாறு வீட்டில் உள்ளே அறைக்கு சென்று பார்த்தபோது. அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 32 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசில் அவர் புகார் தெரிவிக்கவே, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து வந்ததுடன் கைரேகை தடய நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்களை சேகரிக்க முயன்றனர். ஆனால் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொழிற்சாலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைஅருகே உள்ள போடிரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் (37). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னைக்கு சென்றிருந்தார்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story