திருச்செந்தூர் கடலில்110 விநாயகர் சிலைகள் கரைப்பு
திருச்செந்தூர் கடலில் புதன்கிழமை இரரு 110 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 110 விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கோவில் கடலில் நேற்று இரவு கரைக்கப்பட்டன.
இந்து எழுச்சி திருவிழா
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 36-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி, ஆத்தூர், நாசரேத், காயல்பட்டினம், கருங்குளம், பேய்குளம், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் சிறிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட 110 விநாயகர் சிலைகள் நேற்று மாலையில் வாகனங்களில் வைக்கப்பட்டு ஊர்வலமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் கடற்கரையில் வைக்கப்பட்டது.
கடலில் கரைப்பு
விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக கோவில் கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில செயலாளர் சனில்குமார், பா.ஜ.க.வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.