திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை


திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழாவில் வெள்ளிக்கிழமை சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடவருவாயில் தீபாராதனை

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

5-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதானவாயில் அருகில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர்.

பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை, சிவப்பு சாத்தி...

7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணியளவில் சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணியளவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.

8-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், மதியம் 12 மணிக்கு பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

1 More update

Next Story