திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதும் கூட்டம்


திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதும் கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2023 1:15 AM IST (Updated: 23 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையால் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோடை விடுமுறையால் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்செந்தூர் ரெயில்

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7.10 மணிக்கு வந்து, 7.15 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயில் பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு வந்து, 8.05 மணிக்கு புறப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் திருச்செந்தூருக்கு சென்று வருகின்றனர்.

இதனால் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் திருச்செந்தூரில் இருந்து வரும்போது பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

கூடுதல் பெட்டிகள்

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

பாலக்காடு ரெயில் நிலையத்தை விட பொள்ளாச்சியில் இருந்து இந்த ரெயிலில் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் கோவை, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து பஸ்சில் பொள்ளாச்சிக்கு வந்து இந்த ரெயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

பஸ்களை விட கட்டணம் மிக குறைவு என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ரெயிலில் செல்கின்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுடன் நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். எனவே இரவு நேரத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story