அம்மன் கோவில்களில் திருக்கல்யாணம்
சித்ரா பவுா்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
சித்ரா பவுா்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி
பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவில் தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 7 மணிக்கு சக்தி கும்பம் நிறைத்து அம்மனை அழைத்து கோவிலை வலம் வந்து சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை 6 மணிக்கு முத்தங்கி அலங்காரம், 9 மணிக்கு காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 10.25 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு வெள்ளி, தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு ரெயில் நிலையம் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பஸ்தாபனம் செய்து, அய்யன், அம்மனை அழைத்து வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, மாங்கல்ய சுத்யபாராயணம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு பல்லக்கில் திருவீதி உலா வருதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று (சனிக்கிழமை) அம்பராம்பாளையம் ஆற்றில் முளைப்பாரி விடுதல், காலை 11 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.
சிறப்பு பூஜை
இதேபோல் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை 7.30 மணிக்கு முதற்கால பூஜை நடைபெற்றது. இதில் அம்மன் பூபதி அலங்காரத்துடன் எலுமிச்சம் பழம் மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிங்காரம்பாளையம் மாகாளியம்மன் கோவில், கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.