திருக்கல்யாணம் நிகழ்ச்சி
ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
பிரசித்தி பெற்ற சபரிமலை சாஸ்தாவான அய்யப்பன் ஐந்து மலைக்கு அதிபதியாவார். அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துபிள்ளை, பந்தளம,் சபரிமலை என 5 இடங்களில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் கேரள மாநிலம் ஆரியங்காவு கோவிலில் குடிகொண்டுள்ள அய்யப்பனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மகோற்சவ விழா முடிவடையும் தருவாயில் மாம்பழத்துரை பகவதி அம்மனுடன் திருமணம் நடைபெறும்.
நிறைவுநாளுக்கு முன்பு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பு (நிச்சயதார்த்தம்) நடைபெறுவது வழக்கம். மறுதினம் சாமி, அம்பாளும் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
அதன்படி கடந்த 16-ந் தேதி மகோற்சவம் விழா தொடங்கியதை அடுத்து ஆரியங்காவு அய்யப்பனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பு (நிச்சயதார்த்தம்) நடைபெற்றது. ஆரியங்காவு கோவில் தேவஸ்தான போர்ட் நிர்வாகி தலைமையில், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதன்பின்னர் சாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தனி சப்பரத்தில் கோவில் வெளி பிரகாரத்தை வலம் வந்த பின்னர் வசந்த மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.