திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறள்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் 1,330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் பெயர்கள் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிவு குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசுக்குரியோர் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்படும்.
ஏற்கனவே இதில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. இதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், 4-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேலூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.