கூவனூர் அகத்தீஸ்வரர் கோவிலில்திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
கூவனூர் அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்வதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் வகையில், கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வரும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை தலைமையிடத்து செயற்பொறியாளர் சூரியபிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், ரூ.3 கோடி செலவில் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணி மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செட்டித்தாங்கல் அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுத்து கோவிலுக்கு தேவையான பணிகள் குறித்து எடுத்துக் கூறினார். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறையின் விழுப்புரம் இணை ஆணையர் சிவகுமாா், விழுப்புரம் செயற்பொறியாளர் ஞானமூா்த்தி, விழுப்புரம் உதவி கோட்ட பொறியாளர் வசந்த், கள்ளக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் மணிமுடி, விழுப்புரம் உதவி பொறியாளர் ராகவன், திருக்கோயில் செயல் அலுவலர் இரா.அருள், திருக்கோயில் எழுத்தர் து.மிரேஷ்குமாா் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.