திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா
திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நேற்று நடைபெற்றது. அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
வேலால் உருவான தீர்த்த குளம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் "மலைமேல் குமரர்" என்று அழைக்கப்படும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தெய்வீக புலவர் நக்கீரரின் விமோசனத்துக்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு உருவாக்கிய காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளமும் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அரோகரா பக்தி கோஷம்
இதனையொட்டி நேற்று காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கத்தால் ஆன வேல், சகல பரிவாரங்களோடு கொண்டு சென்று கம்பத்தடி மண்டபத்தில் தயாராக இருந்த பல்லக்கில் வைத்தனர்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க பல்லக்கில் வேல் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலை உச்சியில் உள்ள மலை மேல் குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் பல்லக்கில் வேல் சுமந்தபடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பியபடி மலை மீது ஏறி உச்சிக்கு சென்றனர்.
வேலுக்கு மகாஅபிஷேகம்
அங்குள்ள கங்கை தீர்த்த குளத்தில் முருகப்பெருமானின் தங்க வேலுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு மலையில் சமைத்த கதம்ப சாதம் சுடச்சுட பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மலையை விட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்காக வேல் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பூப்பல்லத்தில் வேல் புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.