திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- 6-ந் தேதி மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 6-தேதி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 6-தேதி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை தீப திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகின்ற 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு புதிய வஸ்திரம் சாத்தப்பட்டது. மேலும் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து 12 மணிக்கு அம்பாளுடன் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடியேற்றம்
தங்க மூலாம் பூசப்பட்ட கொடிகம்பத்தில் பால், பன்னீர், இளநீர், புனிதநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து தர்பை புல், மாவிலை, பூமாலை மற்றும் பட்டு வஸ்திரம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மதியம் 12.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கார்த்திகை தீப பிரியனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் கொடிகம்பத்திற்கும், சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
மலையில் மகாதீபம்
திருவிழாவையொட்டி வருகிற 7-ந்தேதி வரையிலும் தினமும் காலை 10.30 மணியளவில் தங்க சப்பர வாகனத்திலும், இரவு 7 மணியளவில் தங்கமயில், குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் என தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 5-ந்தேதி பட்டாபிஷேகம், 6-ந்தேதி காலையில் தேரோட்டம், மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றுதல், 7-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
பல்லக்கில் வந்த கொடி பட்டம்
கார்த்திகை திருவிழா தொடக்கமாக கொடியை யானை மீது வைத்து நகரின் 3 ரதவீதிகளில் வலம் வருவது வழக்கம்.
இதை கொடி பட்டம் என்பார்கள். மேளதாளங்கள் முழங்க யானை மீது கொடியை கொண்டு செல்வதின் மூலம் திருவிழா தொடங்குகிறது என்பதை தெரிவிக்கிறது. மேலும் கொடி ஏறிவிட்டாலே கொடி தடை உள்ளது. ஆகவே உள்ளுர்காரர்கள் வெளியூர் சென்ற போதிலும் தங்கி இருக்காமல் அன்றே ஊருக்கு திரும்பி வர வேண்டும் என்பதை குறிக்கும் பொருட்டு கொடி பட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதேபோல பாரம்பரிய நடைமுறையை குறிக்கும் விதமாக நேற்று பல்லக்கில் கொடி பட்டம் நடைபெற்றது.
கோவில் யானை தெய்வானை தினமும் காலையிலும் மாலையிலும் 3 கி.மீ சுற்றளவில் கிரிவலம் வந்த போதிலும் கொடி பட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.