திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு குடிமைப்பொருள் தொகுப்பினை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.
ஜோலார்பேட்டை நகராட்சியில் உளள 18 வார்டுகளிலும் கடந்த ஆண்டு தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம், எனது குப்பை, எனது பொறுப்பு என்ற அடிப்படையில் சுற்றுப்புறத் தூய்மையே சுகாதாரத்தின் மேன்மை என்று நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் பணியில் 120 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்களை கவுரவிக்கும் விதமாக நேற்று நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குடிமை பொருள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பழனி வரவேற்றார். ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், ஒன்றிய கவுன்சிலர் க.உமா கன்ரங்கம், நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னில வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு குடிமைப்பொருள் தொகுப்பினை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் தேவராஜி எம்.எல்.ஏ. பேசும்போது நகரப் பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் எல்லோரும் ஒன்று சேர்ந்து சாலை, கால்வாய், குளம் போன்றவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வசிக்கும் பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கலெக்டர் பேசியதாவது:-
தூய்மையாக...
தூய்மை பணி என்பது சாதாரண பணி கிடையாது. நாம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு. திருப்பத்தூர் மாவட்டத்தில் நுழைந்தால் குப்பை இல்லாத நகரமாக இருக்க வேண்டும். சாலைகளில் குப்பைகளை போடுபவர்கள் குப்பைகளாக இருக்கிறார்கள். அதை தூய்மை செய்கிறவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். எனவே அனைவரும் தூய்மையாக இருக்க குப்பைகளை ஓரிடத்தில் சேகரித்து அவற்றை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காலியாக இருக்கும் இடங்களில் பூங்காக்கள் அமைத்து மரக்கன்றுகள் நட வேண்டும். இதனை அனைவரும் கடைபிடித்து மரக்கன்றுகளை நட்டு, குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி இரண்டாவது வார்டு புதூர் குறுங்காடுகள் வளர்ப்பு பகுதியில் கலெக்டர், எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு, குறுங்காடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.