திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை சேர்மன் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிநாதன், ராஜசேகரன் வரவேற்றனர். மன்ற பொருட்கள் குறித்த தீர்மானங்களை கணக்கர் வில்வக்கனி வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதாவது, மகளிர் உரிமைத் தொகையினை விடுபட்டுள்ள அனைத்து மகளிருக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்பையா:- எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் 3 இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.
துணை சேர்மன் மூர்த்தி:- 15-வது நிதிக்குழு திட்டத்தில் ஒப்பந்த பணிகளில் வேலை பார்த்த அனைவருக்கும் பணம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமு:- திருப்புவனத்திலிருந்து கழுவங்குளத்திற்கு வரும் பஸ்கள் சரியாக வருவதில்லை.
தஸ்லீம்:- பரமக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் கழுகேர்கடை விலக்கில் நிழற்குடை அமைத்து தர வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முறையாக அழைப்பிதழ் கொடுத்தும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் வராததால் மக்கள் பிரச்சினை குறித்து பேச முடியவில்லை எனக் கூறினர். மேலும் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.