கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
திருப்பூர்
குண்டடத்தில் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 34). கட்டிட மேஸ்திரி. இவரிடம் சித்தாள் வேலைக்கு பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரின் 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 1-9-2019 அன்று அழைத்து சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் தாராபுரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
20 ஆண்டு சிறை
போக்சோ குற்றத்துக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், கடத்திச்சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் இதை ஏக காலத்தில் சுப்பிரமணி அனுபவிக்க நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.