வளம்குன்றா உற்பத்தியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முன்னணி
வளம்குன்றா உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறினார்.
திருப்பூர்
வளம்குன்றா உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் இருப்பதாக லண்டனில் கடந்த கண்காட்சியில் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு நிபுணர்கள் ஆச்சரியத்துடன் ஊக்குவித்ததாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறினார்.
வளம்குன்றா உற்பத்தி கோட்பாடு
திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் வளம் குன்றா உற்பத்தியை நோக்கி பயணித்து வருகிறது. உலக அளவில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஆடை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு வளம் குன்றா உற்பத்தியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். வளம்குன்றா உற்பத்தி கோட்பாடுகளை துரிதமாக அமல்படுத்த ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதார நாடுகள் முனைப்பு காட்டி வருகிறது.
வருகிற 2030-ம் ஆண்டுக்குள் இறுமதி செய்யக்கூடிய பொருட்களில் 50 சதவீதம் வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற சட்டத்தை அந்த நாடுகள் அமல்படுத்தியுள்ளது.
டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு
இந்தநிலையை கருத்தில் கொண்டு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் பின்னணியில் உள்ள பல்வேறு வளம்குன்றா உற்பத்தி கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலகளவில் எடுத்துச்செல்ல முயற்சிகளை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் என்ற அமைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுப்பினராக இணைந்தது.
இந்த அமைப்பு 21 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிக்காத ஆடை உற்பத்தி குறித்தான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளர்கள், பிராண்டுகள் மற்றும் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களில் 5 நாட்கள் கருத்தரங்கு, கண்காட்சியை நடத்தி அன்றைய தேதியில் சூழலியல் பாதிக்காத உற்பத்தி கோட்பாடுகள் மற்றும் சிறந்த செயல்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் உலக அளவில் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
லண்டன் கண்காட்சியில் பங்கேற்பு
அதன்படி இந்த ஆண்டு லண்டன் மாநகரில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று (வியாழக்கிழமை) வரை நடக்கும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் நிபுணர்களுடன் திருப்பூரின் வளம் குன்றா உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக பூஜ்யமுறை சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றாலை மற்றும் சூரியஒளி மின்உற்பத்தி, 8 ஆண்டுகளில் 17 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி, துணிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரித்தல், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் பாலித்தீன், இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், குளங்களை சுத்திகரிப்பு செய்து பாதுகாத்து பராமரித்தல், கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக பங்களிப்பில் திருப்பூர் தொழில் சமூகத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எடுத்துக்கூறினார்கள்.
ஆச்சரியம்
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
திருப்பூரில் இவ்வளவு வளம்குன்றா உற்பத்தி முறைகள் பின்பற்றப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியத்துடன் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு நிபுணர்கள் கேட்டுள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ள இறக்குமதி நிறுவனங்களுக்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குறித்த விவரங்களை கொண்டு சேர்க்க உறுதி அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருப்பூர் குறித்து நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மத்தியில் ஒரு அமர்வில் பேசுவதற்கான வாய்ப்பையும் அளிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர்.
கடுமையான வர்த்தக சூழல் ஒருபுறம், நாளுக்குநாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டில் திருப்பூர் உலகில் மற்ற உற்பத்தி மையங்களை காட்டிலும் முன்னணியில் இருப்பதை உலகுக்கு எடுத்துச்செல்லும் எந்த ஒரு வாய்ப்பையும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் பயன்படுத்தும். நிச்சயமாக வரும் மாதங்களில் திருப்பூர் உலக அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் கவனத்தை பெறும். லண்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் உலக அளவில் 1,300 நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதிகளவு இறக்குமதி வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.