திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை


திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

சிவகங்கை

திருப்புவனம்

பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

வாரச்சந்தை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். மறுநாள் மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும்.

வாரச்சந்தையில் திருப்புவனத்தைச் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் நகர், கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் நேற்று திருப்புவனம் வாரச்சந்தைக்கு வந்து ஆடுகள் வாங்கினர்.

இதையொட்டி மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மேலூர், திருமங்கலம் உள்பட பல பகுதிகளில் இருந்தும் நேற்று முன்தினம் இரவே வியாபாரிகள் அதிகமான ஆடுகளை கொண்டு வந்து சந்தை வளாகத்தில் கட்டியிருந்தனர்.

ரூ.1½ கோடிக்கு விற்பனை

10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் எனவும், 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடாய் ரூ.12 ஆயிரம் எனவும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய கிடாய்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. ஆடு, கிடாய்கள் வாங்க முஸ்லிம்கள், இறைச்சி கடை நடத்தும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிகமாக சந்தையில் கூடினர்.. இதனால் சந்தையில் வியாபாரம் களை கட்டியது.

திருப்புவனம் வாரச்சந்தையில் நேற்று மட்டும் சுமார் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இதேபோல் கோழி, சேவல்கள் அதிகம் விற்பனையானது.


Next Story