திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

சிவகங்கை

திருப்புவனம்

ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசை

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அமாவாசை தினங்களில் திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் நீளமான பந்தல்கள் அமைத்து திதி-தர்ப்பணம் நிகழ்ச்சி தனித்தனியாக நடைபெறும். இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதல் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக திருப்புவனம் வைகை ஆற்றுக்கு வந்தனர்.

முன்னதாக பொதுமக்களின் வசதிக்காக வைகை ஆற்றுக்குள் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. திதி-தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை வைகை ஆற்றின் உள்பகுதியில் உள்ள பந்தலில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் புஷ்பவனேஸ்வரர் -சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர்.

பாதுகாப்பு பணி

ஆடி அமாவாசையையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக திருப்புவனம் வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story