சென்னையில் இருந்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்


சென்னையில் இருந்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 PM GMT (Updated: 1 Oct 2023 1:30 PM GMT)

தமிழக அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டனர்.

சென்னை

விஞ்ஞானி சிவதாணு பிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதள அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பயிற்சி வகுப்பில் 300 பேர் பங்கேற்றனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகளும் அடங்குவார்கள். இவர்களில் 4 மாணவர்களுக்கு ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட நிதியுதவி கிடைத்தது. மீதம் உள்ள 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட முதல் கட்டமாக 50 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர். விமான நிலையத்தில் மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வழியனுப்பி வைத்தார். இதில் பல்லாவரம் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story