கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய சேலையூர் எஸ்.எஸ்.ஐ. - திடுக்கிடும் தகவல்கள்


கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய சேலையூர் எஸ்.எஸ்.ஐ.   - திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 23 March 2024 3:01 PM IST (Updated: 23 March 2024 3:05 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேச எல்லையில் கட்டுக்கட்டாக பணத்துடன் தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரி சிக்கியிருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் காவல் நிலையங்களில் ஒன்றாக, இந்த காவல் நிலையம் உள்ளது. சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நீண்ட காலமாக, நீதிமன்ற அலுவல் விவகாரங்களை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பல குற்றவாளிகளுடன் நெருங்கிய பழக்கம் உள்ளது.

திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ் மடிப்பாக்கத்தில், தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது வங்காளதேச ராணுவத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வங்காளதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.எஸ்.ஐ 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார். அவரிடம் கட்டுக்கட்டாக இந்திய பணமும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை

நடைபெற்று வருகிறது. பல பிரச்சினைகளில் சிக்கி 10 ஆண்டுகள் பணியில் இல்லாமல் மீண்டும் எஸ்.எஸ்.ஐ ஜான் செல்வராஜ் பணியில் சேர்ந்துள்ளார். வங்காளதேச எல்லையில் கட்டுக்கட்டாக பணத்துடன் தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரி சிக்கியிருப்பது தமிழக போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஜான் செல்வராஜ் விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story