டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பக்கோரி வழக்கு:மாவட்ட நூலகர் பணியிடங்களை நிரப்ப தடை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பக்கோரி வழக்கு:மாவட்ட நூலகர் பணியிடங்களை நிரப்ப தடை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நூலகர் பணியிடங்கள்

தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த புவனேசுவரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் நூலக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் எம்.பில்., படித்து உள்ளேன். வீரபாண்டியில் உள்ள அரசு கிளை நூலகத்தில் நூலகராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நூலகத்திலும் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 50 சதவீத இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலமாக நிரப்ப வேண்டும் என்றும், இனசுழற்சி முறையை பின்பற்ற வேண்டும் என்றும், இந்த நடைமுறைகளை 1977-ம் ஆண்டு முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசாணை எண்-129 வலியுறுத்துகிறது.

ஆனால் 40 ஆண்டுகளாக மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கு நேரடியாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இனசுழற்சி முறையையும் பின்பற்றவில்லை.

நேரடி நியமனம்

நூலகர்களை இந்த பதவிகளுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து, அவர்கள் ஓய்வு பெறும் வரை அந்த பதவியில் நீடிக்க செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் நேரடி நியமனங்களை மேற்கொள்ளாததால் என்னைப் போன்ற பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே அரசாணையை பின்பற்றி டி.என்.பி.எஸ்.சி. மூலம் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை தமிழகம் முழுவதும் நிரப்ப வேண்டும் என்றும், அதுவரை இந்த பணியிடங்களுக்கு தற்காலிக அலுவலர்களை நியமிக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

தடை

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜராகி, 40 ஆண்டுகளாக மாவட்ட நூலகர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடக்கவில்லை. இனச்சுழற்சி முறையும் பின்பற்றப்படவில்லை. இதை அரசு அதிகாரிகளே ஒப்புக்கொண்டு கடிதம் எழுதியுள்ளனர் என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில், தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை, மனிதவளத்துறை, டி.என்.பி.எஸ்.சி. முதன்மை கணக்காயர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story