விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,926 பேர் எழுதுகின்றனர்


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும்    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,926 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,926 பேர் எழுதுகின்றனர்.

விழுப்புரம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வு 23 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்காக 10,926 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. இத்தேர்விற்காக வினாத்தாள்களை கொண்டு செல்ல 6 நடமாடும் குழுக்களும், தேர்வை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையிலான 2 பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னேற்பாடுகள்

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை எந்தவித முறைகேடும் இன்றி சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும், முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்தும் தேர்வுக்கூட அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோருக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஸ்வநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், தேர்வு நடைபெறும் 23 மையங்களிலும் முறைகேடுகளை தவிர்க்க தலா ஒரு போலீஸ்காரர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறாத வண்ணம் தவிர்த்திட வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு கொரோனா பரவல் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி அறிவுறுத்தினார்.


Next Story