ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம்ரூ.22 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் 9 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.22½ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம்
கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் 9 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.22½ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூற்பட்டதாவது:-
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதூர்சாமி (வயது 63), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுதாகரன், அவருடைய மனைவி விஜயலட்சமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
தாங்கள் ஆர்.எஸ்.புரத்தில் துணி வியாபாரம் நடத்தி வருவதாகவும், அங்குள்ள தனது வீட்டை போக்கியத்துக்கு தருவதாகவும் கூறினார்கள். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டில் சதூர்சாமியிடம் இருந்து ரூ.6½ லட்சம் வாங்கி உள்ளனர். பின்னர் பல்வேறு தேவைகளுக்காக ரூ.15 லட்சம் வாங்கினார்கள்.
ரூ.22½ லட்சம் மோசடி
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மேலும் ரூ.1 லட்சம் வாங்கினார்கள். பின்னர் எங்களுக்கு கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கோட்டத்துறையில் 9 ஏக்கர் 20 சென்ட் நிலம் இருக்கிறது. நாங்கள் மொத்தம் ரூ.22½ லட்சத்தை உங்களிடம் இருந்து வாங்கி உள்ளோம்.
அதற்காக கோட்டத்துறையில் இருக்கும் அந்த நிலத்தை உங்களுக்கு கிரையம் செய்து கொடுத்து விடுவதாக கூறி உள்ளனர். ஆனால் சொன்னபடி அந்த நிலத்தை கிரையம் செய்து கொடுக்கவும் இல்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
தம்பதி கைது
இதனால் ஏமாற்றம் அடைந்த சதூர்சாமி இந்த மோசடி குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தம்பதியான சுதாகர், விஜயலட்சுமி மற்றும் இதற்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் ஸ்ரீனிவாசன், சதீஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சுதாகர், விஜயலட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஸ்ரீனிவாசன், சதீஸ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.