செங்கத்துறை தடுப்பணையை சீரமைக்க அனுமதிக்க வேண்டும்
கோவை
கோவையில் 6 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் செங்கத்துறை தடுப்பணையை சீரமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கத்துறை தடுப்பணை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சூலூர் அருகே உள்ள செங்கத்துறை தடுப்பணை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு சேதமடைந்தது. இதனை சரிசெய்யக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த தடுப்பணை எந்த துறையின் கீழ் வருகிறது என்ற விவரமும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கத்துறை தடுப்பணையை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் தடுப்பணையை சீரமைக்க எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சிறப்பாசிரியர்கள்
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழகத்தில் கடந்த 13 ஆண்டாக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்பட 8 துறைகளை கொண்ட பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் பெற்று பணியாற்றி வருகிறோம். பணியை நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நிரந்தரம் செய்யவில்லை. முழு நேரப்பணி, மற்றும் மாத சம்பளமாக ரூ.28 ஆயிரம் என்ற கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி, எங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மயில்கள் உயிரிழப்பு
கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பீளமேடு எப்.சி.ஐ. குடோன், ஸ்ரீராம் நகர், முருகன் நகர், பீளமேடு விஜய ஸ்ரீ கார்டன், பயனீர்மில் ரோடு பின்புறம் மற்றும் அதைச்சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி மயில் இறந்து கிடக்கிறது. எதற்காக மயில்கள் உயிரிழந்து வருகிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுதவிர பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.