தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தமிழக அரசு வழங்க இருப்பது  பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு பரிசு தொகுப்பு வழங்குமா அல்லது பணமா வழங்குமா என்ற எதிா்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தேனி

பொங்கல் பண்டிகை

வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

பொங்கல் பரிசு

அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப் படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்தப் தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் மனநிலை

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-

பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம்.

எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.

இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

தரமான பொருட்கள்

விஜயா (குடும்பத்தலைவி, கூடலூர்) :- பொங்கல் பரிசு தொகுப்போடு பணமும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். பொங்கல் பரிசு பொருட்களை பொங்கல் வைத்து கொண்டாடுவதற்கும், பணம் மூலம் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுக்கவும் உதவியாக இருக்கும். கடந்த ஆண்டுகளைப் போன்று பொங்கல் பரிசு பணத்தை ரேஷன் கடை மூலம் கொடுக்க வேண்டும். வங்கி மூலம் கொடுப்பதாக இருந்தால் பணத்தை எடுப்பதற்கு கிராமப்புற மக்கள் சிரமப்பட வேண்டியது இருக்கும்.

சுமதி (குடும்பத்தலைவி, சுக்குவாடன்பட்டி):- அரசின் நிதிச் சுமையை கருதி படிப்படியாக இலவச திட்டங்களை குறைக்க வேண்டியது அவசியம். இருப்பினும் தற்போதைய மக்களின் ஏழ்மை நிலை மற்றும் 2 ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசின் உதவியும் உறுதுணையாக இருக்கும். பணமாக கொடுப்பதற்கு பதில் பொருட்களாக கொடுக்கலாம். அப்படி கொடுக்கும் பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையிலும் இருக்க வேண்டும். பொங்கல் வைப்பதற்கு சர்க்கரை வழங்குவதற்கு பதில், நாட்டு கருப்பட்டி வழங்கலாம். அது பனை தொழிலாளர்களின் வாழ்வுக்கும் கைகொடுக்கும்.

பணமாக கொடுக்கலாம்

ஜெயக்கொடி (தேனி) :- பொங்கல் பண்டிகைக்கு பணம் மட்டும் கொடுப்பதாக அரசு முடிவு செய்திருந்தால் அதை கைவிட வேண்டும். பணம் மட்டும் கொடுத்தால் அது பல குடும்பங்களில் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு உதவியாக இருக்காது. மீண்டும் அந்த பணம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். பொருட்களாக கொடுக்கும்போது கடந்த ஆண்டு போல் இல்லாமல் தரமான பொருட்களை கொடுக்க வேண்டும்.

விஜயன் (ஆட்டோ டிரைவர், தேனி) :- பொங்கல் பரிசை பணமாகவே கொடுக்க வேண்டும். பொருட்களாக கொடுக்கும்போது அவற்றை கொள்முதல் செய்வதில் இருந்து வினியோகம் செய்வது வரை சிறு, சிறு தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அது அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். பணமாக கொடுப்பது அரசு ஒதுக்கும் நிதி நேரடியாக மக்களின் கைகளில் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Related Tags :
Next Story