புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்


புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்
x

கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அதில் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் முகாமில் உள்ள 217 வீடுகளில் 194 குடும்பத்தினர் வசித்து வந்தோம். அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் அரசு புதிதாக வீடு கட்டி கொடுக்க முடிவு செய்து உள்ளது, எனவே வீடுகளை காலி செய்து கொடுத்தால் விரைவில் புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து வீடுகளை காலி செய்து விட்டு ரூ.4 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். தினக்கூலிக்கு செல்லும் எங்களால் அந்த வாடகையை கொடுக்க முடியவில்லை. குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் இதர செலவுக்கு மட்டுமே வருமானம் போதுமானதாக உள்ளது. எனவே முகாமில் உள்ள காலி இடத்தில் விரைவில் 217 புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொது கழிப்பிடம்

வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு மீனாட்சிபுரம் வீதியில் வண்டி காளியம்மன் கோவில் அருகில் பொது கழிப்பிடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. கழிப்பிடத்தை சுற்றி வீடுகள் உள்ள நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொது கழிப்பிட கழிவுநீரை சாக்கடை கால்வாய் மூலமாக குழாய் அமைத்து வெளியேற்றுகின்றனர். கழிவுநீர் குழாய் செல்லும் இடத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பதற்கு சிரமமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பொது கழிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பட்டா கேட்டு மனு

தென்சங்கம்பாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்சங்கம்பாளையத்தில் 22 பேருக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அளவை செய்து கொடுக்கவில்லை. எனவே எங்களுக்கு அந்த இடத்தை அளவை செய்து கொடுக்கவோ அல்லது மாற்று இடம் வழங்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மண் எண்ணெய் பாட்டிலுடன் வந்த மூதாட்டி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு மூதாட்டி ஒருவர் பையில் மண் எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். இதை கண்ட போலீசார் அந்த மூதாட்டியிடம் இருந்த பையை வாங்கினர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர், தொப்பம்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி என்பதும், தீக்குளிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சப்-கலெக்டரிடம், அந்த மூதாட்டி கொடுத்த மனுவில், கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு வெள்ளாளபாளையம் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் வைப்பு தொகை செலுத்தினேன். ஆனால் குடிநீர் இணைப்பு கொடுக்க முடியாது, வீட்டை காலி செய்து கொடுக்கும்படி சிலர் மிரட்டுகின்றனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் இணைப்பு பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story