கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் செய்யக்கோரிகலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து விவசாயிகள் போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் போராட்டம்
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனால் சீரமைப்பு பணிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கோரிக்கை பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தி அலுவலகத்தின் முன்பு தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கி.வே.பொன்னையன், எஸ்.பெரியசாமி, ஏ.ராமசாமி ஆகியோருடன் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோரும், கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க கோரியும், கடை மடை பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் பாசனம் வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கண்காணிப்பு பொறியாளர் நேரில் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அவருக்கு பதிலாக செயற்பொறியாளர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் அதிகாரிகள் வந்திருப்பதை எடுத்துக்கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திட்ட அறிக்கை
பின்னர் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத்தலைவர் ஏ.ராமசாமி, செயலாளர் ரா.ஈஸ்வரமூர்த்தி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.பெரியசாமி, செயலாளர் கி.வே.பொன்னையன் ஆகியோர் சார்பில் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் தொடர்பாக மே மாதம் 8-ந் தேதி நீர்வளத்துறை சார்பில் அமைச்சரின் ஆலோசனையின்படி வேலை திட்ட அறிக்கை வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக நீர்வளத்துறையால் வழங்கப்பட்ட வேலை திட்ட அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும், நீர் வளத்துறையையும் கேட்டுக்கொள்கிறோம். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப சீரமைப்பு வாய்க்காலில் வேலைகளில் ஈடுபட்டு உள்ள வாகனங்களுக்கும், ஆட்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
40 ஆயிரம் ஏக்கர்
கீழ்பவானி கடைமடை ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை இழந்து வருகிறார்கள். ஏறக்குறைய 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உரிய அளவு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது. எனவே கீழ்பவானி கடைமடை பாசன விவசாயிகளின் ஆயக்கட்டு உரிமையை பாதுகாக்க தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை நீர்வளத்துறை வடிவமைப்பில் உள்ளபடி முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.