பணிதள பொறுப்பாளரை மாற்றக்கோரிபொதுமக்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணிதள பொறுப்பாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பணிதள பொறுப்பாளர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. மேலும் ஊராட்சியில் 800-க்கும் மேற்பட்ட 100 நாள் திட்ட பணியாளர்கள் உள்ளனர்.
இதில் 3 பிரிவாக பிரித்து 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் நபர்களில் ஒருவரை தேர்வு செய்து சுழற்சி முறையில் பணிதள பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாசின் மனைவி சங்கீதா என்பவர் கடந்த 2 வருடங்களாக பணிதள பொறுப்பாளராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வேலை வாங்குவதாகவும், இவர் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டும் 100 நாள் பணி வழங்க பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இதனால் நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பணிதள பொறுப்பாளர் சங்கீதா மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் வீரமணி ஆகியோர் 100 நாள் திட்ட பணியாளர்களை பேச்சுவார்த்தை நடத்தி பணிக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பால்நாங்குப்பம் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணி நடைபெற்றது. அப்போது பணியாளர்களும் பணியில் இருந்தபோது, பணிதளபொறுப்பாளர் சங்கீதா தகாத வார்த்தைகளால் பேசி அவமதித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறி திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பால்நாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என அறிவுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் வீரமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பணிதள பொறுப்பாளரை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.