அவசர காலங்களில் தொழில்துறையினருக்கு உதவ முன்வர வேண்டும்

அவசர காலங்களில் தொழில் துறையினருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கோவையில் நடந்த வருமான வரி தின விழாவில் கேரள மாநில முன்னாள் கவர்னர் சதாசிவம் பேசினார்.
அவசர காலங்களில் தொழில் துறையினருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கோவையில் நடந்த வருமான வரி தின விழாவில் கேரள மாநில முன்னாள் கவர்னர் சதாசிவம் பேசினார்.
வருமான வரி தின கொண்டாட்டம்
2010-ம் ஆண்டு முதல் ஜூலை 24-ந் தேதி வருமான வரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருமான வரி தினம் கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதற்கு கோவை வருமானவரித்துறை முதன்மை ஆணையர் மோரா பூபால் ரெட்டி தலைமை தாங்கினார். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவசர காலங்களில் உதவி
அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய பணியை செய்து வரும் வருமான வரித்துறையின் பங்கு சிறந்ததாகும். வருமான வரித்துறை காலத்துக்கு ஏற்ப பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மிக சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. தொழில்முனைவோருக்கு பாதகமான வரி விதிப்பில் உள்ள கட்டமைப்பு தடைகளை சரிசெய்ய வேண்டும்.
தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் அடிப்படை சிக்கல்கள் குறித்து தெரிவிக்க வேண்டியது வரித்துறை அதிகாரிகளின் கடமையாகும். அவர்களின் சிரமத்தை அறிய, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நோயின் போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, ஒரு கொள்கை சீர்திருத்தம் தேவை.
இதற்காக நீங்கள் ஒரு வருங்கால வைப்பு நிதியை அமைக்கலாம். வருமான வரியில் இருந்து ஒரு சிறிய தொகையை கார்பஸ் பண்டு என்ற திட்டத்தில் செலுத்தி அதன் மூலம் ஏதேனும் அவசர காலங்களில் தொழில் துறையினருக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது
தொடர்ந்து விழாவில் அவர் பல்வேறு தொழில் அதிபர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்த விருதானது ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.மலர்விழி, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜவேலு உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. விழாவில் ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






