காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்; அமைச்சர் துரைமுருகனுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்; அமைச்சர் துரைமுருகனுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x

அடுத்த ஒரு வாரத்துக்குள் காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளையும், வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரும் பணிகள் வேகம் குறைவாக நடைபெற்று வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என 4 மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், சரியான நேரத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடையவில்லை என்றால் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யும் திட்டம் கருகி விடும்.

இதற்காக காவிரி படுகையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமை என்ஜினீயர் நிலையிலான அதிகாரி ஒருவரை அனுப்பி, அடுத்த ஒரு வாரத்திற்குள் தூர்வாரும் பணிகள் நிறைவடைவதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தான் குறுவை சாகுபடி இலக்கை எட்ட முடியும்.

மற்றொருபுறம், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story