அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x

மத்திய, மாநில அரசுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

விருதுநகர்


மத்திய, மாநில அரசுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

2 கோடி பேருக்கு வேலை

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் 'எங்கே எனது வேலை' என்ற பரப்புரை பயணம் கன்னியாகுமரி, வேதாரண்யம், சென்னை, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பகத்சிங் நினைவு நாள் அன்று புறப்பட்டது. இந்த பயணம் பாலதண்டாயுதபாணி பிறந்தநாளான வருகிற ஏப்ரல் 2-ந் தேதி திருச்சியில் நிறைவடைகிறது. அங்கு இளைஞர்கள் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும், வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் 9 ஆண்டில் பிரதமராக உள்ளவர் இதுவரை 18 கோடி பேருக்கு வேலை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வேலை வழங்காததோடு வேலையில் இருப்பவர்களையும் பணி நீக்கம் செய்யும் நிலையே அதிகரிக்கிறது.

காலிப்பணியிடங்கள்

மேலும் நேரு தொடங்கி வாஜ்பாய் வரை பிரதமராக இருந்த அனைவருமே பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்கள். தொழிலதிபர்களுடன் நட்பாக இருந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மட்டுமே 33 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் குழப்பம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். இதில் தேர்வாணைய குழுவினர் தவறு செய்ய வாய்ப்பில்லை. மத்திய, மாநில அரசுகளின் காலிப்பணியிடங்கள் நிறைய உள்ளன. அதை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுக்கூட்டம்

விருதுநகரில் தொழில் பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நகர் கருமாதி மடத்திலிருந்து இந்நகர் நெல்லுக்கடை மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. அங்கு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், தேசிய குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.


Next Story