பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்-அடுத்த மாதம் முதல் நடத்துவதாக அறிவிப்பு


பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி  விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்-அடுத்த மாதம் முதல் நடத்துவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 400 கிராம விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி: நீலகிரி பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 400 கிராம விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர்த்து தேயிலை விவசாயத்தில் கூலித்தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள், தொழிலாளர்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் விவசாயிகள் மனு அனுப்பும் போராட்டத்தை கடந்த மாதம் நடத்தினர்.

ஆனாலும் இதுவரை பச்சை தேயிலை விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று சிறு,குறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாக்குபெட்டா படுகர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் தொதநாடு நல சங்க தலைவர் பாபு, மேற்கு நாடு நல சங்க தலைவர் தாத்தன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்து அவர்கள் கூறியதாவது:-

உண்ணாவிரத போராட்டம்

'நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் விலையுடன், உற்பத்தி செலவை கணக்கிடும்போது கட்டுப்பிடியாகவில்லை. இதனால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கேட்டு எம்.எல்.ஏ. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் இதுவரை இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால், வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பொரங்காடு, குந்தா, மேக்குநாடு, தொதநாடு ஆகிய நான்கு சீமைகளிலும் உள்ள 400 கிராமங்களை சேர்ந்த 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் போராட்டம் நடைபெறும்' என்றனர்.



Related Tags :
Next Story