பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி நீலகிரியில், விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
ஊட்டி: பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி நீலகிரியில், விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தை சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் செய்து வருகின்றனர். மேலும் தேயிலை விவசாயத்தில் விவசாயிகள் தவிர கூலித்தொழிலாளர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் அப்படிப்பட்ட தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறைந்தபட்ச விலை
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 31-தேதிக்குள் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாவிட்டால், மாவட்டம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த விவசாய சங்க நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. ஆனாலும் பச்சை தேயிலை பிரச்சினைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
அதன்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு, இத்தலார், கோத்தகிரி அருகே நட்டக்கல் ஆகிய 3 இடங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள், விவசாய சங்கத்தினர் தொடங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் வரை 400 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.