மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
உதவித்தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம்
இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023-24-ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற இயக்கக அலுவலகத்திலோ அல்லது சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது இணையதள முகவரியின் வாயிலாகவோ விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலும், tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.