பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற மின்வாரிய தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது
பொள்ளாச்சி
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற மின்வாரிய தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தின் உடுமலை வட்டகிளை பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் மயில்சாமி வரவேற்றார்.
இதில், மாநில தலைவர் சுடலை, மாநில பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம்
கூட்டத்தில் அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கி யதை போன்று அனைவருக்கும் அகவிலைப்படி வழங்க வேண் டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி ஓய்வூதியரிடம் மாதந்தோறும் ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சில மருத்துவமனைகளில் சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள்.
எனவே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். ஒப்பந்த ஊழியராக பணியாற்றி 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த பணியாளருக்கு ஒப்பந்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து, அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர் போராட்டம்
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசிடம் அனைத்து தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.






