பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரிடெல்லியில் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜாஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜாஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
தனியார்மயமாக்க முயற்சி
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. கிளை சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மத்திய சங்க தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முதலில் 109 வழித்தடங்களில் தனியார் ரெயில்களை இயக்க உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததும் கைவிடப்பட்டது.
தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
அதே ரெயில்களை பாரத்கவுரவ் என்ற பெயரில் ஆன்மிக சுற்றுலாவிற்கு இயக்குவதாக கூறி தனியாரிடம் கொடுப்பதாக கூறினர். இதன் மூலம் வரும் வருமானத்தில் இருந்து ஒரு பகுதி கூட ரெயில்வேக்கு வராமல் மொத்த லாபமும் தனியாருக்கு செல்கிறது. ரெயில்வே நிர்வாக பணிமனை மற்றும் கட்டமைப்பை பயன்படுத்தி ரெயில்களை தயாரித்து தனியாரிடம் விற்பதால் அதிக லாபம் தனியாருக்குத்தான் செல்லும்.
அந்த ரெயில்களை 35 ஆண்டுகள் தனியார் பராமரிப்பதற்கு கொடுப்பதால் பணிமனையில் வேலைபார்க்கும் 70 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.
டெல்லியில் போராட்டம்
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வருகிற 10-ந் ேததி (வியாழக்கிழமை) டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்வதாக கூறுகின்றனர். இது ஏற்புடையது அல்ல. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மயிலாடுதுறை கிளை தலைவர் செல்வம், செயலாளர் வீரமணி, உதவி கோட்ட செயலாளர் சாகுல்அமீது, கும்பகோணம் கிளை செயலாளர் தயாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.